×

மதுரையில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு; வணிகர்களின் பாதுகாவலன் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர்கள் பேச்சு

மதுரை: சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மதுரையில் நேற்று நடந்த வணிகர் விடுதலை முழக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை அருகேயுள்ள வலையங்குளத்தில் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகித்தார். தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் மற்றும் மண்டலத்தலைவர்கள் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்றார். பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா தீர்மானங்களை வாசித்தார். அதன்படி மாநாட்டில், ‘‘இரட்டை விலை கொள்கை ஆன்லைன் வர்த்தகத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை அகற்றிட வேண்டும்.

ஒரே நாடு ஒரே வரி முழக்கம் தணிக்கை செய்யப்பட்ட வரி விதிப்புக்கு அபராதம் தவிர்த்திட வேண்டும். இயற்கை பேரிடர் வணிக பாதிப்புக்கு அரசு காப்பீடு திட்டம் வழங்கிட வேண்டும். ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டங்களில் உள்ள முரண்பாடுகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும். சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும். டெல்டா மாவட்டங்களோடு தென் மாவட்டங்களை இணைத்து பயணிகள் ரயில் போக்குவரத்து இயக்கிட வேண்டும்’’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் அமைச்சர் பி.மூர்த்தி பேசும்போது, ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வணிகர்களுக்கு எப்போதும் துணையாக, வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். வணிகர்கள் மீதும் சிறு வியாபாரிகள் மீதும் தவறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதிகாரிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த 3 ஆண்டுகாலத்தில் வணிகர்களிடத்தில் நான் ஒரு டீ கூட இலவசமாக குடித்தது கிடையாது. அதிகாரிகள் கையூட்டு ஒன்றிரண்டு இடத்தில் பெற்றாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். அடுத்த ஆண்டு விடுதலை முழக்க மாநாடாக இல்லாமல் நீங்கள் மவுனமாக எதைக் கேட்டாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்களுக்கு செய்து கொடுப்பார். வணிகர்களின் பாதுகாவலனாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பார்’’ என்றார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘இன்னும் 2 மாதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ, அதனை ஒன்றிய அரசு நிறைவேற்றும் நிலை உருவாகும். உங்களின் பிரச்னைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனுக்குடன் தீர்வு கண்பார். வணிகர்கள் எந்தவித கோரிக்கைகள் வைத்தாலும் அதை நிறைவேற்றும் அரசாக இது இருக்கும். இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும், அது நமது மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்’’ என்றார்.

மாநாட்டில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் சங்க செய்தி தொடர்பாளர் பாண்டியன்ராஜன், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, வேலம்மாள் குழும நிறுவனர் எம்.வி.முத்துராமலிங்கம், நாகா புட்ஸ் தலைவர் கே.எஸ்.கமலக்கண்ணன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் என்.ஜெகதீசன், ஏ.எம்.ஆர்.ஆர் மகாராஜா டால்மில் நிறுவனர் ஏ.எம்.எம்.ஆர்.சந்திரகுமார், ராஜ்மகால் மதுரை ஆர்.முருகானந்தம், மதுரை பேமஸ் ஜிகர்தண்டா ஜி.ஜிந்தா மதார் அன்ட் பிரதர்ஸ், கல்யாணமாலை மீரா நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மதுரை மண்டல தலைவர் டி.செல்லமுத்து தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
மாநாட்டை ஒட்டி நேற்று மாநிலம் முழுவதும் கடைகள் உள்பட வணிக வளாகங்களுக்கு விடுமுறை அறிவித்து, அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வணிகர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.

The post மதுரையில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு; வணிகர்களின் பாதுகாவலன் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர்கள் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Federation of Merchants Associations Conference ,Madurai ,CM ,Stalin ,Federation of Tamil Nadu Merchants Associations ,Merchant Liberation Slogan Conference ,41st Merchants' Day ,Federation of Tamil Nadu Merchants' Associations ,Federation of Merchants' Associations Conference ,Traders' Protector ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல், மதுரையில் 5 செ.மீ. மழைப்பதிவு..!!